Thursday, November 5, 2009

மனசு குறுநாவல்-வவுனியா ஜெயந்தன்













மனசு
Fury of love...








சோமரட்ணம் ஜெயச்சந்திரன


வெளியீடு
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம


manasu (short novel)
somaratnam jeyachantren
may 2005
publishcr :- vavuniya kalaiillakkiya nanbarkal vaddam
printers :- multivision. vavuniya
type setting :- v.niththiyananthan
cover design :-t.priyanthan
photo(back) :-mahamuni (subu)
© copyright reserved
contacts :-vavuniya,srilanka. jeyanthan08@hotmail.com
Rs.100.00
Euro -5


இது
ஏழைக் கலைஞர்களுக்கு

யாவும்
கற்பனைப் பூக்கள்..



1
இவள் பெயர் இலக்கியா ... இவள் அழகின் சமுத்திரமோ... இவளது உன்னத பாஷை மௌனமோ... ரெக்கோடிங் தியேட்டருக்குள் இருக்கிறது மாதிரி மௌனமாகவே இருக்கிறாள்.

இவளது இதயம் அன்று இந்த டயறிக்கு மட்டும் சொந்தமாக இருக்கிறது. இவள் இறந்து போன கஜனுடைய நினைவுகளை அதிகம் கொண்டதால் இவளுடைய ஆழ்மன நினைவுகள் மருத்துவமூலமாக இப்பொழுது அழிக்கப்பட்டிருக்கிறது.

இவள் இப்பொழுது விரும்புகிறது இந்தக் கொலோன் வாசனையை மட்டும்தான். நான் நினைக்கிறேன் இந்தக் கொலோனை பாவித்த காலத்தில் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். இந்த வாசனை இவளுக்குப் பழைய நினைவுகளைக் கொண்டு வருகிறது. அதனால்தான் அதைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும் விதத்தில் இதை விரும்பியிருக்கலாம். இந்தக் கொலோன், படத்துக்குப் பின்னணி இசைமாதிரி இருந்திருக்கலாம்.

இந்த வாசனை கூட எவ்வளவு மென்மையாக இருக்கிறது அதனால் இந்த இஸ்ரோறி மென்மையான இதயங்களின் வடிவங்களாக இருக்கலாம். இந்த இதயங்களும் வயலின் ஸ்ருதி மாதிரி மென்மையானவை. சிறிது தட்டுப்பட்டால் கூட ஸ்ருதி கலைந்து விடும். ஒருவேளை பொட்டாசியம் மூலகம் போன்று இந்த இதயங்கள் மென்மையாக இருக்கிறதால்தான் என்னவோ இவற்றின் தாக்கத்திறனும் அதிகமாகக் காணப்படுகிறதோ தெரியவில்லை.

பழைய நினைவுகளைச் சுமந்து வருவது பாடல்கள் மட்டு மென்று நினைத்தேன். ஆனால் வாசனைக்கு இவ்வளவு வலிமை இருப்பது இப்போதுதான் தெரிகிறது.

எனக்கு முகுந்தனென்று நண்பன் இருந்தான். அவனிடம் ஒருத்தி ஓடி ஓடி வருவாள். அவன் அதைக் காதலாக நினைத்தான். அவளால் ஒரு நாள் கூட அவனைப் பார்க்காமல் இருக்க முடியாது.

அவள் அவனிடம் வருவது, அவனுக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு டசின் (Royal mirage) கொலோன் போத்தல்கள் வந்திருந்ததன. அந்த கொலோன் வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வாசனை மேல் கொண்ட கவர்ச்சிக்காகவே அவள் வருவாள். மனரீதியாக அந்த வாசனைக்கு அடிமையாக்கப் பட்டிருக்கிறாள்.

அவளால் அவனை விட்டுப் பிரியாத மனமுண்டாயிற்று. அவனில்லை என்றால் அந்த வாசனையில்லை... அதனால் அவளில்லை... வாசனைப் பொருளுக்கு அடிமையாதலென்பது போதைப் பொருளுக்கு அடிமையாதல் மாதிரி, chating இற்கு அடிமையாதல் மாதிரி...




2
ஒரு வருடத்திற்கு முன்பு - இலக்கியா

இன்றைய பெண்களுக்கு வெளியுலகம் தெரிந்திருக்க வேண்டும். வரப்போகும் கணவர் எஞ்சினியருக்கு அல்லது டொக்டருக்குப் படிச்சிருக்கிறார் என்று பார்த்தால் அவர்கள் வாழ்க்கையே இருண்டு போய்விடுமென்று அங்கிள் அடிக்கடி சொல்லுவார்.

இவளுக்கு நிச்சயிக்கப்பட்ட பிரகாஷ் லண்டனில் கொம்பியூட்டர் எஞ்சினியராம். அடுத்த கிழமை இங்கே வருகிறாராம்.

இப்போதெல்லாம் எமது பெண்கள் வெளிநாடுகளில் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். மணப்பெண்ணை அன்போடு அழைத்து தங்களுடைய மிருகத்தனமான இன்னொரு முகத்தைக் காட்டுகிறார்கள்.

சிகரெட்டால் சுடுவது தொடக்கம் இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள். அதிக சுகத்தை ஏற்படுத்தப் பலவிதமான முறைகளைக் கையாளுகிறார்கள். ஒரு விடயம் புதிதாக இருந்தால் மட்டுமே அது போதுமானதாக இருக்கும். இவள் சினேகிதி என்றோ ஒருநாள் சுவிஸிலிருந்து எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்த இலக்கியா கண்கலங்கிப் போனாள்.

இவளுக்கு அந்த வேளையில் ஒரு முழுமையான இடிந்த கவிதைக்குள் புதைந்து போனது மாதிரி மனமிருந்தது. பிராகாஷ் வரவிருக்கும் நாட்கள் நெருங்க நெருங்க செக்கன் முள்ளுக்கம்பி இதயத்தில் ஒவ்வொரு முறையும் துளையிடுவது போலிருந்தது. ஆனாலும் அவன் குறித்த சில நாட்களுக்கு முன்பே வந்திருந்தான்.

"இப்ப என்னால எந்த முடிவையும் எடுக்கேலாமலிருக்கு"

"ஏன் என்னப் பிடிக்கேல்லயா இலக்கியா"

"அப்படிச் சொல்லேல்ல"

"நீங்க ஓகே சொல்லித்தான் நான் லண்டனில் இருந்து வந்திருக்கிறன். எனக்கு நீங்களெண்டு முதலே பிக்ஸ் பண்ணி யாச்சு..."

"என்னால கஜனை மறக்கேலாமலிருக்கு"
அவள் கூறிய வார்த்தை,அவனது இதயத்தில் தீக்குழம்பு இட்டு பேனாவால் எழுதியது போலிருந்தது.

"எனக்கு ஒரே கஜனிட நினைவாத்தானிருக்கு... போன வருஷம் வெளிநாடு போகேக்க கப்பல் தாண்டதில செத்திட்டார்."

அவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக என்னைக் காதலித்தது அவர் இறந்த பின்புதான் எனக்குத் தெரிந்தது. அவருடைய டயறி எதிர்பாராத விதமாக என் கையில் கிடைத்ததிலிருந்து அவர் உணர்வுகளுக்கு அடிமையாகி விட்டேன். அவர் என்னை எவ்வளவு அதிகமாக நேசித்திருக்கிறார். சில வேளை நான் அவருடைய அந்த மென்மையான உணர்வுகளோடே என் வாழ்க்கைக்காலம் முழுவதையும் வாழ்ந்தாலென்ன என்று நினைப்பேன்.

"ஐ லைக் இற்... எனக்கு உங்களை நல்லாப் பிடிச்சிருக்கு."

என் மனநிலையை பிரகாஷிற்கு எப்படிப் புரியவைப்பது. அவள் வீட்டுக்குச் சென்று மீண்டும் கஜனுடைய டயறிக்குள் புதைந்து கொண்டாள். கஜனின் டயறிக்குள் அவள் காணாமல் போன போது இரவின் கண்கள் அவளை வெறித்துப் பார்த்தபடி இருந்தன.


கஜனுடைய டயறியின் சில பக்கங்கள்...

இலக்கியா ஆங்கில வகுப்புக்குப் போவதையறிந்து நானும் அங்கு போக முடிவுசெய்தேன். ஒரு மேசை.... சுற்றி நான்கு கதிரைகள்.... மேசைச்சீலை காற்றுக்குப் பறக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் கவனத்தை ஈர்த்து மூடி மூடிக் கொண்டிருந்தாள். இவளுக்கு, தான் உடுத்திருக்கும் பாவாடை பறக்கும் போது ஏற்படும் உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியையும் எங்களிடம் விடையை எதிர்பார்த்திருந்தார். என்னால் ஒரு வினாவுக்குக் கூட விடை எழுத முடியாமலிருந்தது. அந்த வேளையிலே மழையில் நனைந்தது போல் என்மேனி வியர்த்திருந்தது.

நான் யாரென்று தெரியாமலிருந்த போதும் இலக்கியா தனது கொப்பியை எனது பக்கம் திருப்பியிருந்தாள். அடடா... தாள்களிலே அலங்கரிக்கப் பட்டிருந்தது அத்தனையும் முத்துக்கள் அல்லவா...

அத்தனையையும் எடுத்து எனது சேட்பையில் போட வேண்டும் போலிருந்தது. அப்படியே கொப்பி பண்ணினேன். ஆனாலும் என்னால் midi file இல் ஸ்வரங்கள் அழகாக இருப்பதை போன்ற இவள் கையெழுத்துக்களைக் கொப்பி பண்ண முடியவில்லை.

எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. நான் கொப்பி பண்ணியது ஆசிரியையிடம் திட்டு வாங்கப்போகிறேனே என்பதற்காக இல்லை. கொப்பிபண்ணாமல் விட்டிருந்தால் இலக்கியா மனது நொந்திருக்கும் என்பதற்காகத்தான். இதுதான் எனது முதல் ஆங்கில வகுப்பும் கடைசி வகுப்பும்.

இதற்கு முன்பு 7ம் வகுப்புப் படிக்கும் போதும் நான் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றும் முயற்சி பண்ணினேன். ஆனால் முடிய வில்லை. அது எனக்கு ஒரு நகைச்சுவை சம்பவம் தான்.

நானும் நண்பன் யோகனும் புதிதாக அன்றுதான் ஆங்கில வகுப்பு ஆரம்பம் என்று சென்றிருந்தோம். உள்ளே சென்ற பின்பு தான் எங்களுக்குத் தெரிந்தது அந்த வகுப்புக்கள் தொடங்கி 4 மாதங்கள் ஆகிவிட்டன என்று, ஆனாலும் ஆசிரியர் எங்களை இன்று மட்டும் அந்த வகுப்பி அமரும் படி கேட்டுக்கொண்டார்.

கடைசி வரிசையில் இருந்த எங்கள் இருவருக்கும் நடுக்கம் பிடித்தது. காரணம் ஆசிரியர் இருவர் இருவராக எழுந்து ஆங்கிலத்தில் உரையாடல் வடிவில் பேசிக் காட்டும்படி கூறி இருந்தார்.

சிறிது நேரத்தில் யோகனையும் ஆசிரியர் எழுப்பி விட்டார். நான் தப்பி விட்டேன். இந்த ஆசிரியர் எனக்கு நன்கு அறிமுகமானவர் தான். அதனாலோ என்னை எழுப்பவில்லை என்று நான் எண்ணி முடிப்பதற்குள், பக்கத்து வீட்டுக்காரி என்னை எழுப்பி விட்டாள். அவள் அந்த வகுப்பில் இருப்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது. எனக்கு வெட்கமாய் இருந்தது. காரணம் நானும்,அவளும் ஒரே வகுப்புத் தான். என்னை முன்னால் எழுந்து வரும்படி ஆசிரியர் கூறினார். இன்றைக்கு என்னை நல்லா நோண்டியாக்கப் போகிறாள் என்பது தெரிந்தது.

"பக்கத்து வீட்டுக்குக் கொடுக்க வேண்டிய லெட்டரை post man உங்கள் post box இற்குள் போட்டு விட்டுப் போய்விட்டார். அதை உரிய வீட்டில் சேர்க்கும் போது ஏற்படும் உரையாடல்" என்று தன்னோடு உரையாடும் படி கேட்டாள். எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் ஆசிரியரிடம் கூறினேன்.

"சேர் நான் பக்கத்து வீட்டுக்கெல்லாம் போறேல்ல." என்றேன். எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

இவளுக்கு ஆங்கிலம் பிடிப்பதாலும், ஆங்கிலத்தில் பற்றானவர்களைப் பிடிக்கலாம் என்பதாலும், இவளில் பற்றான நான் இப்போது ஆங்கிலத்தில் பற்றுவைக்க ஆரம்பித்தேன். இவள் அடிக்கடி புரட்டும் மாட்டுத்தாள் cover போட்ட ஒக்ஸ்வேட் ஆங்கில அகராதிப் புஸ்தகம் நானாக(எனது நினைவுகளாக) இருக்க வேண்டும்.

there are two powerful
weapons in this world.
those are love and music !
neither love nor music
does let “heart” to get “stain”




இடிமழை வரும் வேளையில் எனக்கு அவள் நினைவே அதிகமாக ஊற்றெடுக்கும். இந்த வேளையில் நான் சஹாராவில் குடிபுகுந்தாலென்ன என்றிருக்கும். ஆனாலும் என்னையறியாமலே நயாஹராவில் குளிப்பது போல் ஓர் உணர்வு தோன்றும்.

இவளது அழகான கையெழுத்துக்களும் கூட எப்பொழுதும் என்னிடமே இருக்க வேண்டுமென்பதற்காக இவள் பொருட்கள் சுற்றக் கடைக்குக் கொடுத்த பழைய கொப்பிகளையெல்லாம் நான் சேகரிப்பதற்காக பலமுறை சரைசுற்றிய பொருட்கள் வாங்கியி ருக்கிறேன். அவளுடைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஐஸ்கிறீம் மாதிரி மென்மையாகவே இருக்கும்.

பின்னேரம் பழைய நண்பனிடம் போனேன். இலக்கியாவை ஒருவன் நான்கு வருடங்களாகக் காதலித்தானாம் என்று சொன்னான். இந்த வேளையிலே ஒரு எழுத்தாளனுடைய கற்பனைப் படைப்புக்கள் யாராலோ அடியோடு தீக்கிரையாக்கப்பட்டது மாதிரி என் மனம் வறண்டிருந்தது.

விடிந்தபோது கோபி என்னைப் புடைவைக்கடைக்கு அழைத்துச் சென்று தனக்கு நல்ல ரீசேட் செலக்ற் பண்ணித்தரச் சொன்னான். நாளைக்கு என் பிறந்த நாளுக்காக எனக்குப் பிறசன்ற் பண்ணத்தான் என்னையே செலக்ற் பண்ண விடுகிறானென்று நினைத்தேன்.

இந்த (B) ப்ளூ நல்லாயிருக்கும்.... ஆனால் விலைதான் அதிகமாயிருக்கும். எனக்காக அவன் அதிகம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை. அரைகுறை மனதோடு அதைப் பார்த்தேன்.

"ம் ... நல்ல செலக்ஸன்."

அவன் ரீசேட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனை நானெப்படிக்குறை நினைப்பது. என் செலக்ஸனென்றால் அவனுக்கு விருப்பம். நான்தான் அதை யோசிக்க வில்லை. சில வேளை இந்த ரீசேட் எனக்குக் கிடைத்திருந்தால் நான் இலக்கியாவுக்கு முன்னால் அழகாய்ப்போய் நின்றிருப்பேன். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வாழ்வில் பெரிய ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ள உதவக்கூடும் என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.

இப்படியான நேரங்களில் நான் சிறியவனாக இருக்கும் போது அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வரும்.

ஒரு ஊரில் ஜமீந்தார் ஒருவர் சிறப்புடன் வாழ்ந்து வந்தாராம். அவர் அதிஷ்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே எப்பொழுதும் ஒரே வகையான ஆடையைத்தான் அணிந்து கொள்வாராம். ஒருநாள் மட்டும் அந்த உடையை அவர் அணியாமல் விட்டால் அவருக்குக் கிடைக்கவேண்டிய அந்த அதிஷ்டம் இன்னுமொருவருக்குக் கிடைக்கலாமென்று ஊர்மக்கள் பேசிக் கொள்வார்களாம்.

வாழ்க்கைக் காலம் முழுவதையும் இன்பமாகவே அனுபவித்த அவர் ஒரு நாள் இறந்து போனபோது, ஐயோ... நான் வாழ்ந்த வாழ்க்கையிலே வெறுமனே இன்பத்தை மட்டும் அனுபவித்த எனக்குத் துன்பமென்றாலே என்னென்றே தெரியாமல் போய்விட்டதே...

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்த கரைசல் என்பார்களே.... நான் என்ன செய்வேனென்று மேல்லோகம் சென்ற அவரது ஆத்மா அழுது கொண்டதாம்.

எனக்குச் சுருதிப் பெட்டி வாசனை மிகவும் பிடிக்கும். இலக்கியா பேசிக்கொண்டிருக்கும் போது சுருதிப் பெட்டியைப் போட்டுக் கொண்டேயிருக்கலாம்.

சுருதிப் பெட்டி வாசிக்கும் பெண்கள் மிகவும் மென்மையான மனம் படைத்தவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் இப்பொழுது எல்லாம் எலெக்ரோனிக் சுருதிப்பெட்டி பாவனைக்கு வருவதுதான் எனக்குக் கவலை. இவளது ஏசி கலந்த சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
இவளை நான் 72 தாய் இராகத்தினுள் அங்கங்கே அமர்த்தி வைத்திருக்கிறேன். அங்கு அமர்த்தும் போது இவளால் தாய் இராகங்களுக்கு விஷேச இசை வாசனை வருமென்பதால்...

ஆலயங்களில் கூட இறைவனுக்கு வாசனை போடுவது, வரும் பக்த அடியார்களூக்கு மனரீதியான கவர்ச்சியை ஏற்படுத்தத்தான். எனக்கு இறைவனை விட இறைவனுக்குப் போடும் வாசனையே அதிகம் பிடிக்கும். பெங்களுர் ஊதுபத்தி மாதிரி இவள் வாசனை மிகுந்தவள்.

"கடவுளை விஷேசப்படுத்த வாசனை ... தாய் இராகத்தை விஷேசப்படுத்த இவள் ..."

நேற்றிரவு வந்த கனவின் சுமையை இந்தப் பகலால் இன்னும் இறக்கிவைக்க முடியவில்லை. கண்ட கனவைக் குறித்து வைக்க முடியுமே தவிர அதன் உணர்வுகளை குறைந்தது, ஓரிரு நாட்களுக்கு மட்டுந்தான் வைத்திருக்க முடியும்.

உணர்வுகளைப் பதிவு செய்வது மாதிரி ஏதேனும் கருவியிருந்தால் (memory card) தேவையான போது மனதில் திரும்பவும் உணர்வுகளைப் போட்டுக் கொள்ளுகின்ற மாதிரியிருக்கும். ஒவ்வொரு கோயில் முன்னும் அமர்ந்திருக்கும் உண்டியல் மாதிரி...

இவ்வாறான நிலை தோன்றினால் துயரமான நேரத்தில் சந்தோஷமான உணர்வுகளை அள்ளித்தரும் கனவு உணர்வுகளை மனதில் போட்டுக் கொள்ளலாம்.

இலக்கியாவைப் பலமுறை, நான் பாவிக்கும் கொலோன் சந்தித்திருக்கிறது. குறிப்பாக நானிவளைப் பார்க்கப்போகும் போது இந்தக் கொலோனையே பாவிப்பேன். நல்ல மென்மையான வாசனை. இவளுக்கு இந்த வாசனை மிகவும் பிடிக்குமென்பதும் எனக்குத் தெரியும். இந்த வாசனையின் முகவரியை மட்டும் வைத்து , அவள் தன் அம்மாவோடு பல கடைகளில் தேடியுமிருக்கிறாள்.

ஒரு நாள் இதைத்தேடிக் கடைக்குப் போனபோது கடைக்காரன் இரட்டை அர்த்தத்தில் கதைத்திருக்கிறான்.

"வாங்கவன் பாப்பம் வாங்கவன் காட்டிறன்."

இவர்களுக்கெல்லாம் முதலில் கழுத்தைத்தான் வெட்ட வேண்டும். பிறகுதான் மிகுதி... இந்த விடயத்தில் எல்லாப் பெண்களும் அவதானமாக இருக்கவேண்டும் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் போலிருந்தது.

இன்றெல்லாம் பெரிய இடங்களில் பெண்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்களால் ஒரு சிலரை மட்டுந்தான் இனங்காண முடிகிறது. பெண்ணடிமை சம்பந்தமாக பெண்கள் அடுப்படியில் கரிச்சட்டி பிடிப்பது மட்டுந்தான் நாடகங்களில் பார்க்க, காண்பிக்க முடிகிறது.

கடந்த வாரம் நண்பனுடைய தங்கையிடம் யாழ் சங்கீத விரிவுரையாளர் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார். தன்னுடைய விருப்பத்திற்கு இணங்கினால் மட்டுமே, தான் கற்பிக்கும் பாடத்தில் அதிகப்படியான புள்ளிகளைப் பெறமுடியுமென்று கூறியுள்ளார்.

இன்று இலக்கியா பிறந்தநாள். நீண்ட நாட்களாகக் கோயிலுக்குப் போகாத எனக்கு இன்று போக வேண்டும் போல் தோன்றியது. ஆனாலும் எனது பிடிவாதம் இடங்கொடுக்கவில்லை. ஊரிலிருந்து வந்த அம்மா பின்னேரம் கோயிலுக்குப் போய்வந்து பிரசாதம் தந்தார். அபொழுது தான் என்னால் மனத்தின் சக்தியை அறிய முடிந்தது. டயறியின் சில பக்கங்களை புரட்டிய இலக்கியா கண்கலங்கிப் போனாள். எனது நிழல் போல் இவர் இருந்திருக்கிறார்.



3
எனக்குப் பெண்களையே பிடிக்காது. நான் சிறியவனாக இருக்கும் போதே அம்மா இறந்திட்டார்... அப்பா இன்னொரு கல்யாணஞ் செய்திட்டார். எனக்குச் சின்னம்மாவக் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை... ஒரு நாள் அப்பாவின் பணம் எடுத்ததற்கு உள்ளங்கையில் நெருப்பால் சுட்டுவிட்டார். பிரகாஷ் தனது வலது கையிலிருந்த தழும்பைப் பார்த்துத் தடவிக்கொண்டான்.

இலக்கியாவிடமிருந்து நிறைய அன்பை எதிர்பார்க்கிறேன் அன்பை அறிய அவதிப்படுகிறேன். ஒரு வேளை எனக்கு அன்பென் றாலே என்னென்றே தெரியாமல் போய்விடுமா என்று பயப்படுகிறேன். இவளால் பொழியும் அன்பு என்னிடம் மட்டுமே வர வேண்டும் .... ஒரு வீதங் கூட வேஸ்ராக விடமாட்டேன்.

இப்படி எல்லாம் கற்பனை செய்யும் போது இவள் இறந்து போன ஒருத்தனை மனதில் பதித்து வைத்திருந்தால் என்னால் எப்படித் தாங்குவது. இவள் அன்பை மட்டுந்தான் எதிர்பார்க்கிறேன்.

"ஐ நீட் ஒன்லி கேர் அபெக்ஷன்"

இருபது வருடங்களுக்குப் பிறகு புதிதாகக் கிடைக்கும் இந்த அன்பை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

"ஐ ஆம் நொட் ரெடி ரூ லூஸ் எனிதிங் போ எனிவண்" இதனால் தான் நான் இவள் மனதில் இருக்கும் அவன் நினைவுகளை அழிக்க வேண்டுமென்று பிரபல வைத்தியர் ஒருவரை பல சிரமங்களின் பின்பு சந்தித்தேன்.

"இலக்கியா மனசில இருக்கிற நினைவுகளை அழிக்க முடியாதா டொக்ரர்"

"அது சில நேரம் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வரலாம்."

"இவள் என்ர நினைவுகளோட மட்டுந்தான் இருக்க வேணும்."

"சைக்கோலொஜிஸ்ற் ஒருவரை மீற் பண்ணிப்பாருங்களன்."

"மீற் பண்ணினனான்"

"என்ன சொன்னார்."

"அதிர்ந்து போயிற்றார். இவளிட அந்த நினைவுகள் அடுத்த ஜெனறேசனுக்குக் கூடக் கடத்தப்படுமாம்."

"................."

"எனக்குப் பயமாயிருக்கு டொக்ரர்... இவளிட செயற்பாடுகளைப் பார்க்க நானே மாறீடுவன் போலயிருக்கு."

"ஆழ்மன நினைவுகளை அழிப்பதென்பது இயலாத ஒன்று. சில நேரம் விபத்துக்குள்ளான சிலருக்கு அழிவதுமுண்டு ...."

"விபத்து ஒன்றை ஏற்படுத்தினா இப்படி எதிர்பார்க்க முடியதா"

"அது சட்டவிரோதம்."

"விபத்துக்குள்ளாகி நினைவுகளை இழந்தவர்களை இனங்கண்டு மூளையில் எந்த இடம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்து அந்தப் பகுதியைச் செயலிழக்கச் செய்து நினைவுகளை இழக்கச்செய்யேலாதா"

"இது கதைக்குத்தான் சரி."

"............."

"அடுத்த மாதம் அமெரிக்காவில இருந்து ஒரு டொக்ரர் வாறார். அவரிட்டக் கதைக்கிறன்."




4
அன்றிரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மனச்சுமையோடு இருந்த இலக்கியா, கஜனுடைய டயறியின் பக்கப் படிக்கட்டுகளில் இறங்கத் தொடங்கினாள்.

இரவு பரீட்சை எழுதிவிட்டு கொழும்புக்குப் போன கோபியை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பேரில் கைது செய்து ஐந்தாம் மாடிக்குக் கொண்டு போய் விட்டார்களாம். நான் நினைக்கிறேன், இலங்கையில் எரிமலை தோன்றியிருந்தால் சித்திரவதை முகாம் அங்குதான் இருந்திருக்கும்.

காலையில் மாமி திருமண வீட்டிற்கு வந்த இடத்தில் என்னையும் பார்க்க வந்ததாகச் சொல்லி ஐந்நூறு ரூபா தந்தார்.பணமுடையவர்கள் பணமிருக்கிறதென்று தெரியப்படுத்த பணத்தைக் கொடுக்கலாம். நல்ல மனமுடையவர்கள், நல்ல மனமிருக்கிறதென்று தெரியப்படுத்த எதைத்தான் கொடுப்பது.

மாமிக்குப் பிரியா என்றொரு மகளிருக்கிறாள். சொத்துக்கள் தொடர்ந்தும் தன்னிடமே இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டோடு இருக்கிறமாதிரி அவளுக்கு ஒரு பெடியனை மாமி பார்த்திருக்கிறார்.

பெண்ணினது கரெக்டர் பிழையென்றால் அவள் அம்மா வளர்த்த வளர்ப்புப் பிழையென்று அர்த்தம். ஆணினது கரெக்டர் சரியில்லை என்றால் அப்பா, அம்மா, இருவரும் வளர்த்த வளர்ப்புச் சரியில்லை என்று அர்த்தம்.

இவளிடமிருப்பதெல்லாம் பணம்,அழகு,கலை இவைகள் தான். தான் வைத்திருக்கும் வீணைக்கும் விலை பேசி விட்டாள். இவர்களைச் சுற்றியிருக்கும் கூட்டம் நிலையில்லாத பணத்திற்காகவும்,நிலையில்லாத அழகுக்காகவும், நிலையில்லாத கலைக் காகவும்தான் நிலையில்லாமல் சூழ்ந்திருக்கிறது. ஆனால் எங்களைச் சுற்றியிருக்கும் கூட்டம்.... அதை நானே சொல்லக்கூடாது இல்லையா...

ஆண்டவன் சுயநலக்காரன். பணக்காரர்களுக்குத்தான் தொடர்ந்தும் உதவியாளனாக இருந்து வருகிறான். தனது பக்த அடியார்களின் (தன்னலம் மிகுந்த) வேண்டுதலின்படி கொடுத்துக் கொடுத்துத்தான் பிச்சைக்காரனாகி விட்டால் தனக்குதவப் பணக்காரர்கள் தேவை என்று நினைத்து விட்டானோ... தன்னம்பிக்கை இல்லாதவன்...

நாளைக்குக் கப்பல் வெளிக்கிடுவதால் இரவு ரெயினில் கொழும்புக்கு வரும்படி இன்று ஏஜென்சிக் காரனிடமிருந்து போன் வந்தது.

"கோயிலுக்கு நேந்திருக்கிறன். பிள்ளையார் கோயில் ஐயரிட்ட அர்ச்சனை செய்து நூல் வாங்கி அனுப்பியிருக்கிறன்." அம்மா ஊரிலிருந்து எழுதியிருந்த கடிதத்தை ஆறுதலுக்காகத் திரும்பவும் படித்தேன். மனதுக்கு அதிக சுகமாக இருந்தது.

இலக்கியாவைப் பார்க்க இரண்டு நாட்களாக முயற்சி பண்ணியும் முடியாமல் போய்விட்டது... இன்றைக்கு கார்த்திகை விளக்கீடு.... அவள் கட்டாயம் விளக்கு வைக்க வெளியே வருவாள். அவள் ஏற்றும் விளக்கின் ஒளியை விட, அவள் முகமலர்வின் ஒளியே அதிகமாயிருக்கும். கடைசியில் ஏமாந்தேன் அவள் வெளியே வரவில்லை.




5
இரவு கொழும்புக்குப் புறப்பட்டேன். அட எனக்கும் கூட இந்த ரெயினின் குணம்தான். அடம் பிடிக்கிற தன்மை, தனிவழி, அதிகசுமை, பங்சுவாலிட்டி இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

யன்னல் கண்ணாடியைத் திறந்து இருக்கையில் அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டேன். மனதில் இருக்கும் நினைவுகளை (f) "போவேட்" பண்ணமுடியால் இருந்தது. என்னை அனுப்பி வைக்கக் கூடப் பக்கத்தில் யாருமில்லை. இந்த ரெயின் சுமக்கும் சுமையைவிட என் மனதிலேயே அதிக சுமையிருக்கிறது.

எதிரே இருக்கும் இருவருடைய பார்வையும் என்மீது அடிக்கடி விழுகிறது. இவர்களை உடனடியாக அடையாளம் காணுமளவுக்கு என்னால் முடியாமல் போய்விட்டது. விழிகளை வன்முறை செய்து நீரை அடக்கிக்கொண்டேன். எதிரே கணவனோடு அமர்ந்திருக்கும் இவள் கண்கள் ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட கண்கள் தான்.

இவள் சுவேதாதான். கொஞ்சநாள் பக்கத்து வீட்டிலதான் வாடகைக்குக் குடியிருந்தவள். நோட்ஸ் கொப்பி வாங்க என்று என்னிடம் அடிக்கடி வந்திருக்கிறாள்.

இவள் எனது றூமுக்கு வரும் நேரத்தில் வீட்டு றிப் சுவிச் ழுகுகு ஆகும். இவளின் பேச்சு அவ்வளவு ஹெவியானது. இவளைக் கல்யாணஞ் செய்து கொண்டால் இரண்டு புது அஷோக் லேலண்ட் பஸ் வாங்கலாம் என்று என் நண்பன் அடிக்கடி என்னிடம் சொல்லிச் சிரிப்பான். கணவனின் அருகில் அவள் மௌனமாய் அமர்ந்திருக்க பழைய அந்த நினைவுப் பாதையில் நான் நடக்கத் தொடங்கினேன்.

"என்னத் தெரியுமா" அவள் கேட்டாள்.

"உங்களத் தெரியும் ஆனா உங்கட பெயர் தெரியாது."

"என்ன எல்லாருக்கும் தெரியும், அதால உங்களுக்கும் தெரியுமெண்டு நினைச்சிற்றன்."

"உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சதாலதான் உங்களை எனக்குத் தெரியேல்ல" மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

என்னில் தனக்கு அன்பென்று அடிக்கடி சொல்லுவாள். இவள் இலக்கியாவின் சாயலில் இருப்பதால் எனக்கும் இவளைச் சிறிது பிடிக்கும். எனக்கு அந்த நடிகையைப் பிடிக்கும். அதற்காகத் திருமணம் செய்து கொள்ளப் பிடிக்குமா என நினைத்திருக்கின்றேன்.

ஒரு நாள் திடீரென்று யாழ்ப்பாணம் போவதாகக் கூறினாள். அவளிடமிருந்த எனது போட்டோவையும் பறித்தெடுத்துக் கொண்டேன். போட்டோவில் தன்பெயரை எழுதி வைத்திருந்தாள். அப்படியே கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டேன் கற்பனையாலே...

யாழ்ப்பாணம் போயும் தனக்குத் திருமணம் நடக்கப் போவதாக ஒருதடவை போன் பண்ணியிருந்தாள். இவளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்றவுடன் ஏன் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.கொஞ்சமேனும் மனதுக்குப் பிடித்துவிட்ட ஒருத்தியை எவனோ ஒருவன் உரிமை கொள்ளப் போகிறான் என்பதை நினைக்கும் போது மனதுக்குக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது.

நான் மட்டும் ஒருத்தியைக் காதலிக்கலாம் ஆனால் இவள் யாரையும் காதலிக்கக்கூடாது என்ற மனநிலை எனக்குரிய ஒன்றா அல்லது ஆண்களுக்கே உரிய ஒன்றா என நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

ஒரு வேளை நான் இவளில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று எனக்கு மட்டுந்தான் தெரியும். இவள் யாரையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவோ என்றும் தெரியாது.

இந்த நேரத்தில் "எக்ஸ்கியூஸ்மி" என்ற குரல் பழைய நினைவுகளைக் கலைத்த போது திறந்திருந்த யன்னலூடு குளிர் காற்று என் முகத்தில் பரவ கறுப்பு மரங்களைத் தாண்டி வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது ரெயின். அவள் கணவரும் நானும் அறிமுகம் ஆகிக்கொண்டோம். பின்பு எனக்கு இலக்கியா மீது இருக்கும் காதலையும் அவர் அறிய ஆவலாக இருந்ததாலும், என் மனதில் இருக்கும் துன்பங்களை யாரிடமாவது சொன்னால் சிறிதளவேனும் குறையும் என்பதனாலும் அவரிடம் சொன்னேன்.

எனக்கு இரணைப்பிள்ளைகள் பிடிக்கும். அதுவும் இவளை மாதிரி அழகான பிள்ளைகள் பிறக்கும். சிலவேளைகளில் இவள் அணியும் கண்ணாடியைத் திருடி நான் அணிந்து பார்ப்பது போல் எண்ணத் தோன்றும். இவளது பார்வையின் சக்தி அதிகமென்பதால் இவள் பார்க்கும் பொழுது எனது விழிகளுக்கும் அதிக சக்தி கிடைத்திருக்கிறது.

எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. இவள் அதிக பக்தியாய் இருக்கிறது மிகவும் பிடிக்கும். நேற்றிரவு இவளை அணைத்த படியே நித்திரை செய்தது மாதிரி எனக்குள்ளே ஒரு உணர்வாய் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் பிறந்ததை நினைத்து மகிழ்கிறேன். ஏனென்றால் இவளை 1999, 2000 என இருநூற்றாண்டுகளாக எனக்கு விரும்பச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே...

"இலையில பச்சயம் இருக்கிற மாதிரி உங்கட காதல்.. "

" என்ர மனதில அவள் உணர்வு அசிற்றாக ஊறியிருக்கிறதால இதயம் உக்கிக் கொண்டிருக்கு"

"................"

"அசிற்றை அகற்ற முடிஞ்சாலும் இதயத்துக்குப் பாதிப்பு வரும். இதயம் அசிற்றோட இருந்து இயைபாக்கம் அடைஞ்சிற்று"

"உங்களை என்னால புரிஞ்சு கொள்ள முடியிது. நானும் காதலிச்சிருக்கிறன். சுவேதாக்குக் கூடத் தெரியும் கட்டாயம் அந்த ஸ்ரோறிய நீங்க தெரிஞ்சு கொள்ள வேணும்."

தொடர்ந்தும் ஓரிரு நிமிடங்கள் மௌனமழையால் மேகங்கள் சூழப்பட்டிருந்தன. கார்த்திக் கதையைக் கூற ஆயத்தமானார்.

மெம தும்ப்பிரிய நவத்தன்னே பொல்காவெல, றாகம, மருதான,சகா கொழும்பு கொட்டுவ...



6
நாங்கள் நேசிக்கும் பெண் பிறமாவட்டத்தில் வசிப்பவளாக இருந்தால்,ஒரு நாள் அந்த மாவட்டத்திற்குத் தேவையொன்றிற்காகச் செல்லும்போது, அந்த மாவட்டத்தின் எல்லையை நெருங்கும்போது செலூலர் போனினுடைய சிக்னல் ஒவ்வொன்றாக அதிகரிப்பதைப் போன்று மனதில் அவளுடைய நினைவுகள் அதிகரித்து ஆனந்தம் பெருகிக்கொள்ளும்.அந்த மாவட்டமே அவளாகத்தான் தெரியும். இந்த வேளையில் ஏற்படும் வேதனையுடன் கூடிய இன்பம் எதனையும் ஈடுசெய்யாது.

ஒரு நாள் கோயிலுக்கு டெக்றேசன் செய்யப்போயிருந்தேன். அங்கு வந்திருந்தாள்.

"நான் இதில நிக்கிறது உங்களுக்கு டிஸ்ரொப்பாயிருக்கா." என்றாள்.

"ம்.... நீங்க பக்கத்தில நிக்கிறதால என்னால எதுவுமே செய்யேலாமலிருக்கு... நெஞ்சு படபடக்குது."

"நான் இதில நிக்கிறது உங்களுக்கு டிஸ்ரொப்பாயிருக்கா"

"நீங்க வாழ்க்கை முழுக்க என் பக்கத்தில இருக்க வேணுமெண்டு எதிர்பார்க்கிறன்." இப்படி எதுவுமே நினைக்காமல் "இல்ல" என்ற தோரணையில் தலையாட்டினேன்.

ஒரு நாள் கொம்பியூட்டர் சென்ரரால் ட்ரிப் (trip) போயிருந்தோம். அவளும் வந்திருந்தாள். இறங்குமிடமெல்லாம் Bag ஐ எல்லாம் தூக்கிவந்தாள்.

"உங்களுக்காகத்தான் இந்தப் பூவை வாங்கினனான். பிடிச்சிருக்கா."என்றாள்

"இல்ல"

"ஏன்"

"இந்தப் பூவைப்பற்றிய என் அறியாமையோ, இந்தப் பூவை என்னால் அறியமுடியாமையோ, அல்லது அத்தை மகளுடன் பழகியது மாதிரி இந்தப் பூவோட அதிகமாகப் பழகி விட்டேனோ தெரியாது."

"................."

"இந்தப் பூ சிலருக்குப் பிடிக்கிறதால எனக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அல்லது இந்தப் பூ சிலருக்குப் பிடிக்காததால எனக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்."

சில வேளைகளில் எனக்குப் பார்க்கப் பாவமாயிருக்கும். என்னை எதிரே பார்க்கும் போது புன்னகை மழை பொழிவாள். அவள் கேட்பதற்கு மட்டும் விடையளித்து வந்தேன். அன்று பின்நேரமே நெருக்கமானோம்.

மறுநாள் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு எல்லோரும் ஆயத்தமானோம். அன்றிரவே ஊருக்குத் திரும்புகிறோம். அன்று முழுவதும் அவளோடு கதைப்பதில்லை என்று முதல் நாள் இரவே முடிவெடுத்திருந்தேன்.

சில மனதைக் கவர்ந்த பாடல்களை ஒலிப்பதிவு செய்து ட்ரிப் (trip) போகும் போது கொண்டு போயிருந்தேன். இவை மிகவும் என்னைக் கவர்ந்த பாடல்கள்.

இப்பாடல்களை என் வாழ்நாளில் எப்போது கேட்டாலும் எனக்கு அவள் ஞாபகமே ஊற்றெடுக்கும். பாடல்களைக் கேட்கும் போது என்னருகில் நெருக்கமாக அவள் மட்டுந்தான் இருந்தாள்.

நாங்கள் பிரிய வேண்டுமென்று அவள் அல்லது நான் அல்லது சூழல் முடிவு செய்தால் என் வாழ்நாளில் இப்பாடல்களைக் கேட்கவோ, ஞாபகப்படுத்தவோ முடியாது. மீறிக் கேட்க நேர்ந்தாலோ அல்லது ஞாபகப் படுத்தினாலோ அவளின் நினைவே மிஞ்சும்.

இப்பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்பதால் கூட அவற்றில் சலிப்பு ஏற்படச் செய்யலாம். ஆனால் அது பலாத்காரம் செய்வதைப் போன்றது.

எல்லோரையும் குறூப் போட்டோ எடுக்கக் கூப்பிட்டிருந்தார்கள் நான் மட்டும் நிற்கவில்லை. இதை அவளது விழிகள் ஏந்தியதைக் கவனித்தேன். இது கூட அவளிடம் கோபமாக இருப்பதைக் காட்டுவதற்கு எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்பம் தான்.

"கார்த்திக் அண்ணா சாப்பிடேல்லையா"

நான் கதைக்க விரும்பவில்லை என்று தெரிந்தும் கூட அவள் கதை கொடுத்துக் கொண்டிருப்பாள். நான் கதைக்காமல் விட்டாலும் கூட அவள் போட்டிருந்த கிறீன் கலர் சுடிதார் எனக்குப் பிடித்திருந்தது.

எனக்கு இருக்கும் பிடிவாதத்தை அப்பொழுது அவளால் தெளிவாக உணர முடிந்திருக்கும். இன்னும் சிலமணி நேரந்தான் ஒன்றாக இருக்கப் போகிறோம்.

"என்னோட கதைக்க மாட்டியளா"

நான் கதைக்க மாட்டேன் என்றதும் அவளும் என்னோடு கோபம் போட்டுக்கொண்டாள். அவளைப் பார்த்தேன்... அவளிடம் அந்த வேளையில் புன்னகை கலக்காத பார்வை மட்டுமிருந்தது. அவள் புன்னகையையும் சேர்த்து முழுமையாக அப்பொழுது என்னிடம் இரண்டு மடங்காயிருந்தது.

இன்னும் சில நிமிடங்களில் அவள் வீடு வரும் இறங்கி விடுவாள். என்னைத் தொடரும் அவள் பார்வையை எப்படித்தான் சொல்வேன். அவள் இறங்கும் இடம் வந்தது. தொடர்ந்தும் அவளையே நோக்கிக் கொண்டிருந்தேன். அவள் என்னிடம் விடை பெற்றாள். அவள் விழிகளில் பிரியப் போகிறோமே என்னும் ஏக்கம் தெரிந்தது. அத்தோடு அந்தக் கோபமும் நிறைவுக்கு வந்தது.

நூறு வீதமும் எங்களுக்குப் பிடித்தது மாதிரி இருக்க வேண்டு மென்று அம்மாவைத் தவிர யாரையும் எதிர்பார்க்க முடியாது. நெருங்கிய நண்பன் கூட இருக்க மாட்டான்.

எங்கள் மனதில் கூட நாளுக்குநாள் எத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நேற்றுப் பிடித்தது இன்று பிடிக்காது. இன்று பிடித்தது நாளை சொல்லத் தெரியாது. எனது கோபத்துக்கு அவள் அன்று அணிந்திருந்த ஆடைதான் காரணம். மறுநாள் எதிர்பார்த்த படியே அவள் போன் எடுத்திருந்தாள்.

"தம்புள்ளையில் வைச்சு நான் தந்த பனடோல் போட்டனியளா" என்றேன்.

"ம்.. அத என்னால வாழ்நாள் முழுக்க மறக்கேலாது. ரெண்டு மிச்சமிருக்கு"

"நான் உங்களோட நெருக்கமாவதற்குக் காரணமாயிருந்த நபர் யார் தெரியுமா"

"கொம்பியூட்டர் மாஸ்ரரா"

"இல்ல... அந்த நபரில்லையென்றால் இப்ப உங்களுக்கு நானில்லை... ஐ மீன் பிரெண்டா"

"ஏதும் க்ளு தாங்கவன்."

"நேர ஒழுங்கு கொண்டவர். பாரிய இலக்குக் கொண்டவர். பல சுமைகளைச் சுமப்பவர்.அவர், தன் வழியில யார் வந்தாலும் விடமாட்டார்"

"தலை வெடிக்குது."

"நான் அவரோட நெருங்கியிருக்கும் போது மட்டும் ரப்லட் பாவிக்கிறேல்ல...அவரால் பல கவிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்"

"MP3 பிளேயரா"

"சொல்லவா"

"ம்"

"ரெயின்."

"பன்ராஸ்ரிக்"

"ரெயினில ரவல் பண்ணேக்க எனக்கு வாந்தி வாறேல்ல... அதனால ரப்லட் பாவிக்கிறேல்ல"

சுற்றுலா போவதற்கு முதலில் ஐ ஏ பி எக்க்ஷாம் எழுதி விட்டு ரெயினில் வரும்போது இருவரும் ஒரே கொம்பாட்மென்ரில் மீற்பண்ணி இருக்கிறோம். விழிகளால் மட்டும். இருவருடைய மனங்களும் பேசிக்கொண்டன.

"உங்களுக்கு போன் பில் ஏறப்போகுது"

"ஏன் நான் அலட்டுறனா"என்றாள்

"போன திங்கள் வீட்ட வந்தனியளல்லோ...அம்மாவுக்கு உங்களை நல்லாப் பிடிச்சிருக்காம். ஆனா எந்த விதத்தில எண்டுதான் தெரியாமலிருக்கு."

"................"

"நேற்றுக்கூட அம்மான்ர மடியில படுத்திருக்கேக்க நீங்க நல்ல பிள்ளையாமெண்டு சொன்னா"

"உங்கட ஆர்த்தி எப்படி"

"ஒரே உங்கட பெயரச் சொல்லி நக்கலடிப்பாள்."

இவ்வளவு நேரமாக யார் போனில் கதைக்கிறதென்று அம்மா எனக்குத் திட்டியுமிருக்கிறார். சிலவேளை அவள் போன் எடுத்து வீட்டு விடயமெல்லாம் சொல்லுவாள்.

கடைசியாக ஒரு சனிக்கிழமைதான் கதைத்தவள். பின்பு ரெலிபோனும் எடுப்பதில்லை. அவள் வீட்டுக்கு என்ன காரணமென்று அறிய போன் பண்ணியிருந்தேன். அவள் அக்காதான் தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருந்தார்.

அவள் மனது நோகும் படியா நான் எதுவுமே செய்யவில்லை. அவளால் என்னை மறக்கும் போது என்னால் ஏன் முடியாது. நான் நினைக்கிறேன் அவள் தன்னுடைய மனசுக்கு வேறு சிம்காட்டை மாற்றியிருக்க வேண்டும். அமைதியோடு இருக்கையில் சாய்ந்து கொண்டேன். எனது பேர்சனல் டயறியை யாரோ படித்திருந்தது போல அடிமனம் இருந்தது.

"விடிய இருந்து யாரோ போனில விளையாடிக் கொண்டிருக்கினம்." அப்பா சொன்னது என் காதுகளில் விழுந்தது.

"ஏன் அடிக்கடி போன் எடுக்கிற பிள்ள இப்ப எடுக்கிறேல்ல"அப்பா கேட்டார்.

"வீடு மாறவேணுமெண்டவள் மாறீற்ராள் போல" என் வாயில் இப்படியொரு பொய் எப்படி வந்ததோ தெரியாது.

"வீடு மாறேல்ல அவளிட மனந்தான் மாறியிருக்க வேணும்." அப்பாவினுடைய வெளிப்பார்வை எனக்கு அப்படியிருந்தது.

இரண்டு நாட்களின் பின்பு தன்னிடமிருந்த எனது புத்தகங்களைக் கொடுத்து விட்டிருந்தாள். அவள் என்னுடைய பொருட்களை வைத்திருக்கும் போது என் ஞாபகங்கள் அதிகமாக வருமென்று பயப்படுகிறாளோ.... வீட்டுக்கு வரும் றோங் கோல்ஸ், மிஸ்ட் கோல்ஸ் எல்லாம் அவளே எடுப்பதாக எண்ணி ஆனந்தம் அடைவேன்.

சில மாதங்களின் பின்பு அத்தனை நட்சத்திரங்களையும் என் விழிகள் வாடகைக்கு எடுத்திருந்தன. அதனால் என்விழிகள் அதிக பிரகாசமாயிருந்தன. இனி என் கண்களிலிருந்து அவள் தப்பவே முடியாது. என்னைப் பார்த்தேதான் ஆகவேண்டும். காரணம் நானொரு அறிவிப்பாளனாகத் தொலைக்காட்சியொன்றில் சில மாதங்கள் பணிபுரிந்து வந்திருந்தேன்.

ஒரு நாள் அவளை நிகழ்வொன்றில் கண்டேன். என்னைக் கண்டதும் தான் சந்தோஷமாக இருப்பது போல் முகமூடி அணிந்து கொண்டாள். சம்மந்தம் இல்லாமல் எல்லாம் புன்னகை மழை பொழிந்தாள். அவள் நல்ல நடிகையும் கூட என்பது எனக்கு அன்றுதான் தெரிந்தது.

பார்ப்போம் இன்னும் எத்தனை நாட்களுக்கு அவளால் நடிக்க முடியுமென்று... சில வேளை என்னைப் பைத்தியக் காரனாக்குவதற்கு முயன்று தான் பைத்தியமாகி விட்டாளோ என்று நினைத்தேன். நாட்கள் விரைவாக ஓடி இரண்டு வருடங்கள் தொலைந்து போயின. நானும் வேலைவிடயமாக யாழ்ப்பாணம் சென்று விட்டேன்.



ஒரு நாள் இரவு ரெயினில் கொழும்புக்குப் புறப்பட்டேன். தொடர்ந்தும் அவளுடைய ஞாபங்கள் தான் எனக்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தன. நானிருந்த கொம்பாட்மென்ற் மூலையில் தரையிலிருந்த ஒரு உருவம் என்னைக் கண்டதும் தலையைச் சேலைத் தலைப்பால் மூடிக்கொண்டது.

எனக்கு ஏற்கனவே நன்கு பழக்கப்பட்ட உருவம் தான் ஆனால் அவள்தானென்று என்னால் பின்பு தான்உணர முடிந்தது. அவள் முகமெல்லாம் வெள்ளை வெள்ளையாய் மாறியிருந்தது. அவள் வெண்குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிள்ளை... ஒரு வயதிருக்கும். என்னால் தொடர்ந்தும் அவளைப் பார்க்கேலாமல் இருந்தது. நான் பேச வாயெடுத்தேன். அவள் தன்வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.

"சுகமா இருக்கிறியளா" என்றாள்.

"ம்.... நீங்க சுகமா இருக்கிறியளா"

"இப்பவாவது உங்களுக்கு என்னோட கதைக்க வேணு மெண்டு விருப்பம் வந்ததே"

"இது என்ன கோலம் ஏன் இப்படி இருக்கிறியள்"

"எனக்குக் கிடச்சிருக்கிற புருஷன் அப்படி"

"எங்க வேலை செய்யிறார்"

"Bank இல... சரியான நடிப்புக்காரர். நடிகர் பிரகாஷ்ராஜ் கூட நடிப்பில தோத்திடுவார். நல்லாக் கொடுமப் படுத்துவார். சில நேரம் என்ர உள்ளங்கால்களில சிகரெட்டால சுட்டு விளையாடுவார்."

அவளுடைய பாதங்கள் எவ்வளவு மென்மையானவை என்று எனக்கு மட்டுந்தான் தெரியும். அவள் பாதங்களை என் இரண்டு கரங்களாலும் ஏந்தியிருக்கிறேன்.

"இப்ப டிவோஸ் எடுக்க நிக்கிறார்."

"ஏனாம்."

"நானிப்ப வடிவில்லையாம்... வெள்ளை வெள்ளையாய் அசிங்கமா வந்திற்றனாம். இப்ப புதுசா யாரையோ பாத்திருக்கிறாராம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தன்னோட வேலை செய்யிற கொஞ்சப் பேரைக் கூப்பிட்டு ஒரே குடி கூத்துத்தான்."

"இத எப்படி உங்களால இவ்வளவு சிம்பிளாச்சொல்ல முடியிது."

"இந்த இரண்டு வருஷமா அழுதழுது அழுகையெண்டாலே என்னெண்டே தெரியுதில்ல... இவன்தான் பாவம். படிப்பிச்சுப் பெரியாளாக்கி விடவேணும்."

"சாப்பிட்டவனா"

"ம்... பணிஸ் வாங்கிக் குடுத்தனான். எழுப்பாதேங்கோ நித்திர கொண்டுட்டான்."

".............."

"கலியாணஞ் செய்த புதுசில ஒரே உங்கட நினைப் பாத்தான் இருந்தது. பிறகு இவர் எனக்குத் தாற வாய்ச்சொல்லுக்கும், உடற்காயங்களுக்கும் மருந்து போட நேரம் சரியாயிற்று..."

பாவம்... இவள் அம்மா நூலாசிரியரின் உரையை வாசிக்காமல் உள்ளடக்கத்தை மட்டும் வாசித்திருக்க வேண்டும்.

"நான் உங்கட மிஸ்ரரோட கதைக்கவா."

"அவருக்கு யாரும் அட்வைஸ் பண்ணுறது பிடிக்காது."

"உங்கட Wife ஐப் பற்றிச் சொல்லவே இல்லையே."

"நல்ல குணம்... குழந்தைப்பிள்ளை மாதிரி ..."

"நீங்களும் அப்படித்தானே"

"கொழும்பில சொந்தக்காரர் யாரும் இருக்கினமா"

"என்ர பிறண்ட் கீதா இருக்கிறாள் அவள் ஒரு கிழமைக்கு வந்து தன்னோட நிற்கச் சொன்னாள். அதுதான் போறம்."

"இது என்ர விசிட்டிங் காட்"

"வேண்டாம்..."

"பிளீஸ்..."
அதனோடு ஆயிரம் ரூபா நோட்டையும் வைத்துக் கொடுத்தேன்.

"தாங்ஸ்...."

கீதான்ர பிள்ளைக்கு ஏதும் வாங்கக் காசில்ல எண்டிருந்தன் வந்திற்று... முருகா... அவள் மனது எண்ணிக்கொள்ள போட் ஸ்ரேசனும் நெருங்கியது.

"கார்த்திக் அண்ணா" கலங்கிய விழிகளோடு என்னை அழைத்தாள்.

"உங்கட நினைவா நீங்க தந்த பனடோல் இன்னமும் வச்சிருக்கிறன்."

உடைந்த மனதோடு புறப்பட்டேன். எங்கள் சந்திப்பு ரெயினில் தொடங்கி ரெயினிலையே முடிந்தது. கார்த்திக் கூறிய வற்றைக் கேட்டுக்கொண்டிருந்த கஜனுக்கு தன் துயரம் மறந்து போனது போலிருந்தது.

"இப்ப உங்களுக்கு அவவோட நினைவு வாறேல்லையா."

"எப்படி அவள் நினைவுகளில இருந்து விடுபடப் போறனெண்டு கவலப்பட்டன் ஆனா அது சுலபமாயிற்று."

"எப்படி..."

"நான் நினைக்கிறன் மறத்தலென்பது, ஒன்றுகால ஓட்டத்தில் மறத்தல், மற்றது நாங்களாகவே விரும்பி மறத்தல்."

"அப்ப மறந்திற்றியளா"

"அவளில இருக்கிற அன்பைவிட சுவேதாவிலேயே அதிகமா அன்பு வச்சிருக்கிறன். அதனால அவளிட சப்ரர் மைண்டுக்கு வாறது குறைவு."

"......."

முதலில் யாரும் யாரையும் காதலித்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்பு, ஒருவருக்கு ஒருவர் அன்பை ஆழமாக்கிக் கொண்டால் முதல் சப்ரறே ஞாபகத்துக்கு வராது.

"அவவிட பெயரச் சொல்ல மாட்டியளா... நீங்க ஸ்ரோறியச் சொல்லேக்க உங்கள மறந்து ரெண்டு முறை அவபெயரச் சொல்லீற்றியள்" ரெயின் கோட்டை ஸ்ரேசனை அடைந்தது.



7
இன்றிரவு திட்டமிட்டபடி கப்பலில் புறப்பட இருக்கிறோம். ஏழுமணிக்குப் புறப்பட இருந்த பஸ் ஒன்பது மணிக்குப் புறப்பட்டு ஒரு இடத்தை அடைந்தது. இது புத்தளமாக இருக்க வேண்டுமென்று சிலர் கூறிக்கொண்டார்கள்.

எல்லோரும் கப்பலில் ஏறிக்கொண்டோம். முதல் தடவையாக இதில் பயணம் செய்யப்போகிறதாலோ என்னவோ அதிக பயமாயிருந்தது. அம்மா அனுப்பி வைத்திருந்த திருநீற்றை நெற்றியில் அப்பிக் கொண்டேன். அருகில் இருந்த எல்லா மதத்தவர்களும் வாங்கிப் பூசிக்கொண்டார்கள்.

"இனி நாங்கள் எல்லாரும் ஒரு குடும்பம்."

அடடா.... இத்தனைபேர் விழிகளிலும் எத்தனை விதமான இலட்சியங்கள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இவைகளில் எனது இலட்சியம் ஒரு துளி மட்டுந்தான்.

ஒருவர் கூறினார், தான் வெளிநாடு போய் பணம் சம்பாதித்து அம்மாவைப் பார்க்க வேண்டுமாம். இன்னொருவர் சொன்னார், அப்பா இறந்த நேரத்தில் சவப்பெட்டி வாங்கக் கூடப் பணமில்லையாம். எங்கள் சமுதாயம் சவப்பெட்டியின் தரத்தை வைத்தே அவர்கள் வாழ்க்கைத் தரத்தை எடை போடுகிறது என்பது முற்றிலும் உண்மை.

வேறொருவர் சொன்னார், தன்னை விரும்பியவள் தன்னிடம் பணமில்லை என்றவுடன் ஏமாற்றி விட்டாளாம். வீட்டில் சீதனம் தரும் நிலையில் நாங்களில்லை. உங்களிடமும் எதுவுமில்லை. என்னதான் இருந்தாலும் இந்த உலகத்தில் பணமில்லாமல் வாழ முடியாது. நீங்கள் ஒரு பணக்காரியைத் திருமணஞ் செய்யுங்கள். நானும் அப்படியே செய்கிறேன் என்று சொன்னாளாம்.

இன்னுமொருவர் சொன்னார், தனக்கு வெளிநாட்டு நாகரிகம் அதிகம் பிடிக்குமாம் அதுதான் போகிறாராம். அடுத்து ஒருவரிடம் கேட்டேன், அவர் இயக்கத்தில் இருந்த பொழுது பல குற்றச் செயல்களைச் செய்தாராம். இப்பொழுது தன்னைத் தேடுகிறார்களாம். அதுதான் தப்பி ஓடுகிறாராம். இவரைப் போல் இருப்பவர்கள் தான் வெளிநாடுகளில் இன்று சிலோன் றவுடிகள் என்று முத்திரை குத்தப்பட்டு இருக்கிறார்கள்.

எங்களோடு வரும் பெண்களில் ஒருத்தியை அத்தான் கூப்பிடுகிறாராம். எனக்கு விருப்பமில்லை. அத்தான் தான் காசு கட்டி வரச்சொல்லிக் கரைச்சல் படுத்துறார் என்று சொன்னாள்.

இன்று காலையில் சாப்பிட எவருக்கும் எதுவுமில்லை. தனியே கோதுமை மா மட்டுந்தான் இருக்கிறதாம். என்னிடம் கூட இரண்டு லெமன்பப் பிஸ்க்கற் பக்கற் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் பசியாக இருக்கும் போது நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது.

என்னை மாதிரியே ஒழித்து வைத்திருந்தவர்கள் வெளியே எடுத்தார்கள். இப்பொழுதுதான் எங்களுக்கு எள்ளை ஏழாய்ப் பிரித்த கதை விளங்கியது.

இன்றோடு நாங்கள் புறப்பட்டு நாற்பத்தி நான்கு நாட்கள் ஆகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எங்கள் பயணம் தொடரப்போகிறதோ தெரியாது.

அன்றிரவு ஒரு நிலப்பிரதேசத்தை அடைந்து மறுநாள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம். இந்த இடத்தில் சூரியன் வளரும் போது கதிர்களினால் நீரிற்குக் கிடைக்கும் மாயை அழகு என்ன அற்புதமாய் இருக்கிறது.

ஒருவகையில் சிந்தனைக்கும் ஒளிக்கும் ஒற்றுமை தெரிகிறது. ஒளியினால் நீரிற்கு அழகு... நல்ல சிந்தனையினால் மனதிற்கு அழகு....

எந்தத் துயர வேளையிலும் இயற்கையை ரசிக்கும் மனம் கொண்டோருக்கு துயரத்தின் நெருக்குதல் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை. அடடா... கண்களை கவர்ந்திழுக்கும் பரந்து கிடக்கும் வானவெளிகள் புதுப்புது பறவையினங்கள்.

இந்த வேளையில் ஒரு கவிஞன் பெற்ற அத்தனை சந்தோஷங்களையும் நான் எட்டியது போன்ற ஒரு புத்துணர்ச்சி எனக்குள் குடிகொண்டிருந்தது. இந்த இடத்தில் நானும் இலக்கியாவும் தனிமையில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்.

இன்னும் சில நாட்களில் நாங்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்து விடுவோம் என்றார்கள். நாங்கள் நம்பிக்கை மழையில் நனைந்து கொண்டோம்.

இன்று முழுவதும் என் உடம்பெல்லாம் ஒரே நோவாக இருந்தது. சிறிது நேரம் படுத்திருந்தேன். கப்பல் தாழப்போகிறதாம் என்று எல்லோரும் ஆரவாரப் பட்டு ஓடித்திரிகிறார்களே. மேல் தட்டுக்கு ஓடினேன். இருட்டாக இருந்ததால் எதுவுமே தெரியவில்லை. ஆனாலும் சில வித்தியாசங்களை என்னால் அறிய முடிந்தது.

இன்னும் சில நேரத்தில் எங்கள் உயிர்களை சமுத்திரம் ஆக்கிரமித்துவிடுமாம். எல்லோரும் தங்களுடைய தெய்வங்களை வேண்டிக் கொண்டார்கள்.

இந்த நடுக்கடல் இந்த நடு இரவில் எங்களைத் தின்னத் தொடங்கிவிட்டது. எங்களைக் காப்பாற்ற எந்தச் சிறகுகளும் இல்லை. உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்கிற நினைவைவிட இந்த ஆழ்கடலில் யாருமில்லை.

தண்ணீரின் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது. அம்மாவும் எத்தனை நாட்களுக்குத்தான் கோவில் ஐயரையும், பிள்ளையாரப்பனையும் நம்பிக் கொண்டு இருக்கப் போகிறாவோ தெரியாது.

இலங்கை நேரப்படி அதிகாலை இரண்டு மணி காட்டுகிறது. இலக்கியா இப்பொழுது நன்றாக நித்திரை செய்வாள். இப்போதுதான் நீரோட்டம் கழுத்தளவுக்கு வந்திருக்கிறது.

சிறிது நிமிடங்களில் எல்லோருடைய நினைவுகளும் உணர்வுகளும் நிறச்சாயம் கலப்பது போல் சமுத்திரத்துடன் சங்கமமாகிக் கொண்டபோது அத்தனை நட்சத்திரங்களும் பார்த்துக் கண்ணீர் விட்டன.

இப்பொழுது நீரின் செறிவு அதிகளவாக இருக்க வேண்டும். இந்த வேளையில் ஹைட்றோமானி இருந்திருந்தால் எவ்வளவு உதவியாயிருக்கும். அத்தனை உயிர்களின் உணர்வுகளையும் வடிகட்டிச் சேகரிக்க வேண்டும். கஜனுடைய மனசு நீருடன் சங்கமமாகி இலக்கியா... இலக்கியா... என்றே பரவிக் கொண்டிருந்தது. அவன் மனதில் அவளது நினைவுகளின் அதிகரிப்பால் அவள் மனதுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இலக்கியாவை நினைத்துத் தன் இலத்திரன் பாய்ச்சல்களை நிறுத்தியிருந்த அவனது உணர்வுகள் அவள் மனதை நிறைத்துக் கொண்டன.

"அம்மா..."

"இலக்கியா ஏதும் கெட்ட கனவு கண்டனியா திருநீறப் பூசிக்கொள். விடிய முத்துமாரி அம்மன் கோயிலுக்குப் போவம்."

உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் ஒன்று விருப்பமாக இருந்திருக்கும். தங்களது உயிர் பிரிந்த பிறகு தேடி வருபவர்களிடம் உடல்களைச் சேர்ப்பதை விட உணர்வுகளைச் சேர்க்க முயற்சி செய்யட்டும்.

அவர்கள் மூச்சுத்திணறி இறக்கும் போதுதான் மிகவும் கஷ்ரப் பட்டிருப்பார்கள். முதலில் நீரில் ஒளிக்கற்றைகள் சங்கமமானது. இப்பொழுது நீரில் மனக்கற்றைகள் சங்கமமாகி இருக்கிறது.




8
எனக்குக் கஜனிருந்து படித்த இடத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறியது. அவன் படிக்கும் மேசையில் சாய்ந்து கொள்கிறாள். இப்பொழுது அவளால் அவன் மனதை இன்னும் தெளிவாக அறிய முடிகிறது. சுவரிலே இருக்கும் அவன் கிறுக்கல்களுக்குள் முழுமையாகப் புதைந்து போகிறாள்.

நானும் இலக்கியாவும் ஆங்கில வகுப்பில் ஒன்றாகப் படிக்கிறதால் இருவரும் நண்பர்களாகி விட்டோம். இன்று என்னிடம் வந்து தன்னுடைய பிறந்தநாளென்று என்னை வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தாள். பின்னேரம் இவள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைத்தான் கட்டாயம் எதிர்பார்த்ததாகச் சொன்னாள். இவளிடம் எனது சிறு அன்பளிப்பைக் கொடுத்தேன்.

இந்த அன்பளிப்புப் பொருள் அன்றாடம் எல்லோரும் பாவிக்கும் பொருள். இதை கையில் கிடைத்ததிலிருந்து ஒழுங்காகப் பாவிக்க வேண்டும். இதை எப்பொழுது பாவிக்க முடியாமல் போகுதோ அன்றிலிருந்து என்னோடு வாழ்க்கை பூராவும் கதைக்கக் கூடாது என்பதை என்னில் அன்பான இவளிடம் கூறியிருந்தேன். இவளுக்கு அன்பளிப்பாக கொடுத்த பேனாவை இன்னும் முப்பது நாட்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த முடியும்.

இப்பொழுது கிழமையில் என்னை இரண்டு முறை சந்திக்க விரும்புகிறவள் இனி முப்பது நாட்கள் மட்டுமே என்னோடு பழகமுடியும் என்பதால் ஒவ்வொருநாளும் என்னைச் சந்திப்பாள். இதனால் என்மனதில் உள்ளதை இவளால் தெளிவாக இனங்காணமுடியும். இப்படிச் சின்னதாக ஒரு கற்பனை செய்து கொண்டேன்.

இன்று கௌதமனுடைய நூல் வெளியீட்டு விழா. மூன்று மாத காலமாக இருவரும் கதைப்பதில்லை. எனக்கு அழைப்பிதழ் தராத போதிலும் நான் சென்றிருந்தேன். அவனை எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் அவனெழுதும் கவிதைகளை நான் விரும்பிப்படிப்பேன்.

அவன் சிலருக்கு வால் பிடித்திருந்தால் இன்று எத்தனையோ பட்டங்களைப் பெற்றிருப்பான். ஆனாலும் தகுதியானவர்களால் தகுதியானவர்களுக்குக் கொடுக்கப்படுவதே தகுதியானதாகக் கருதப்படுமென்று சிலர் கூறுவார்கள்.
நுளம்பு வலைக்குள் ஹார்மோனியப் பெட்டியொன்று இருப்பதாக சுவரிலே படம் வரையப்பட்டிருக்கிறது. இது ஹார்மோனியப் பெட்டியை நுளம்பு நெருங்காமல் தடுப்பதற்காக என்று எண்ணுகிறேன்.

"ஓம் கௌசல்யா சுப்ரஜா
ராமபூர்வா சந்யா பிரபர்ததே
உத்திஷ்ட நரஹர் தூல
கர்த்தவ்யம் தெய்வமாம்மிகம்..."

அதிகாலை சுப்ரபாதம் கேட்கிறது. தாய், மகளை எழுந்து நீராடிச் சுத்தமாக உலர்ந்த ஆடை அணிந்து போகும்படி சொல்கிறாள்.

"வேண்டாம் அம்மா என்ன விடுங்கோ"

அவளுக்குத் தன்னை விலைபேசப் போவது போன்ற அச்சம். அங்கு போக முன்பும் குளிக்க வேண்டும், போய்வந்த பின்பும் குளிக்க வேண்டும். அந்த இடம்தான் பாஸ் புதுப்பிக்கும் பிறவுண் கொம்பனி. மூலையில் கிடந்தவரிகள் இலக்கியா கண்களுக்குள் கரைக்கப்பட்டன.

நேற்றிரவு முழுவதும் ஒரே தலைப்பாரமும் காய்ச்சலுந்தான். ஏனென்றால் நான் குளிக்கும் போது கஜனின் நினைவில் இருந்ததால் தலையில் தண்ணீரை ஊற்றி விட்டேன். அவர் பழகினவர்களோடு எனக்கும் பழக வேண்டும் போல் ஆசையாய் இருந்ததால் நேற்று அவர் நண்பர் வீட்டுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமென்று போனேன்.

இப்பொழுது கஜனின் டயறியை மாதிரி என்னுடைய டயறியும் நல்ல நிறையுடையதாக வருவதை என்னால் அவதானிக்க முடிகிறது.

"ஐ லைக் இற்"

இவளுடைய டயறியைத் தொடர்ந்தும் படிக்க முடியாமல் பக்கம் ஒன்றை மடித்து மேசையில் வைத்தான் பிரகாஷ்.

அன்றிரவு தொடர்ந்தும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. மின்சாரம் தடைப்பட்டது. மேசையிலே மெழுகுதிரி பூரண தகனம் நடைபெறுவது போன்று ஒளிவீசிக் கொண்டிருந்தது. இந்த வேளையில் உருகிக் கொண்டிருக்கும் மெழுகில் சிறு பூச்சியொன்று சிக்கி மீளேலாமல் துடித்துக் கொண்டிருந்தது.

பூச்சியை மீட்டெடுக்க வேண்டுமானால் திண்மமாகிய மெழுகைத் திரவமாக்க வேண்டும். திரவமாக்கினால் வெப்பநிலையின் அதிகரிப்பால் பூச்சி இறந்து விடும். பிரகாஷிற்கு எதுவுமே செய்ய முடியாமல் இருந்தது. இப்பொழுது இந்தப் பூச்சியிடம் உயிர் மட்டும் தான் இருக்கிறது. இந்தப் பூச்சியையே என்னால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே இலக்கியாவை எப்படிக் குணப்படுத்தப் போகிறேன்.

இவள் மனநினைவுகளை இழந்து இரண்டு வருடங்களாகியும் இவளிடம் எந்த மாற்றமுமில்லையே.

எனது நண்பனின் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவம் தான் என்மனதில் பெண்களைப் பற்றிய தவறான எண்ணம் முற்றுமுழுதாகத் தோன்றக் காரணமாய் இருந்தது.

அவன் திருமணஞ் செய்யும் போது அவளுக்குத் தன்னைப் பிடித்திருப்பதாகவும் அதனால்தான் அவளை மணந்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தான். ஏனென்றால் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று விரும்பியிருந்தான்.

தனக்குப் பிடித்தவளுக்கு தன்னையுமல்லவா பிடிக்க வேண்டும். அதனால் தன்னைப் பிடித்தவளை மணஞ் செய்து கொள்ள முடிவு எடுத்திருந்தான்.

திருமணம் நடந்து இரண்டு வருடகாலமாகியது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஒருநாள் அவன் வீட்டுக்குப் போகும்போது அவனது மனைவி ஒருவனுடன் தகாதமுறையில் இருந்ததைக் கண்டவன் இருவரையும் உயிரோடு தீ வைத்து எரித்து விட்டான்.

அவன் இப்பொழுது கூட மனநோயாளியாகவும், ஆயுள் தண்டனைக் கைதியாகவும் லண்டனில் இருக்கிறான்.

நான் எவ்வளவு முட்டாள் தனமான வேலையைச் செய்திருக்கிறேன். எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரியாக நினைத்து விட்டேனே. தன்னையே ஒருவன் விரும்பி விட்டான் என்பதற்காக, அவன் இறந்து போயும் கூட வாழ்க்கை முழுவதும் அவனையே நினைத்து வாழ வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறாளே....

இவளைத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியுமா. குணப்படுத்துவதென்பது இயலாத ஒன்று. நாளடைவில் குணமாகலாம், குணமாகாமலும் விடலாம்.

இலக்கியாவை வெளியிடங்களுக்கு கூட்டிச்செல்லுங்கள். இவளுக்கு எது எதெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அன்று டொக்ரர் சொன்னதை பிரகாஷ் தன்னுள் நினைவு படுத்தினான்.

குழந்தைப் பிள்ளைபோல் இருக்கும் இவளை வாழ்நாள் முழுவதும் தாயைப்போல் அவளருகிலிருந்து பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்து இருக்கிறேன்.

மூன்று வருடங்கள் உதிர்ந்து போனபின் டாக்ரர் கூறியது போல் கஜனுடைய உயிர் பிரிந்த அந்த இடத்திற்கு இலக்கியாவை அழைத்துச் சென்ற போது இவளுக்கு நினைவுகள் திரும்பியது.

இலக்கியாவை அருகிலிருந்து கவனித்துக் கொண்ட பிரகாஷின் மனதில் கஜனின் நினைவுகளெல்லாம் கலந்து போயிருந்தது. இலக்கியா, கஜனின் நினைவிழந்திருந்த காலத்தில் பிரகாஷ் கஜனை நினைத்தபடியே இருந்தான். பிராகாஷால் எழுதப்பட்ட டயறியையும் இலக்கியா இப்போது வாங்கிக் கொண்டாள்.

பிரகாஷ் இவ்வளவு நாளும் கஜனின் மனநிலைக்கு மாறி இருந்ததால் கஜனின் நினைவுகளை இன்னும் ஆழமாக்குவதற்கு இது உதவும்.

கஜன் விரும்பும் இளையராஜாவின் பாடல்களோடு என் வாழ்க்கைக்காலம் முழுவதையும் வாழ்ந்திடுவேன். அவள் மனதுக்குள் எண்ணிக்கொண்டு மீண்டும் அவன் டயறிக்குள் புதைந்து கொண்டாள்.

-முற்றும்-



நன்றிகள்

கந்தையா ஸ்ரீகணேசன்
தமிழருவி சிவகுமாரன்
தமிழ்மணி அகளங்கன்
கே.கோகுலதாஸ்
கே.ஆர்.றஜீவன்
வி.நித்தியானந்தன்
அ.நிஷாந்தன்
ஏ.ஜெஹான் தர்மேந்ரா


மற்றும்

மகாமுனி சுப்பிரமணியம்
மு.திலீபன்
செ.சன்ஷ்லி
க.பிரதீபன்
ஜெ.சுபாசினி